ஆறுபடை வீடும் பாடல்வரிகள்
நாவல் பழம் தந்து ஞானத் தமிழ் கேட்ட
கந்தா வடிவேலா என்னப்பனே முருகா
உனக்காக தமிழ் பாடல் பல பாடினேன்
இருந்தாலும் இதமாக நீ கேட்க
ஒரு பாடல் இப்போது நான் பாடுவேன்
பாடுவேன் முருகா . . .
ஆறுபடை வீடும் அருள் வழங்கும் முருகா
அருகே நீ ஓடோடி வா
மூவிரண்டு முகம் ஜொலிக்க
ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா
ஈசன் மகனே எனைக்காக்க இங்கே
உனையின்றி வேறாரய்யா
நெஞ்சார நான் நினைக்க பஞ்சாமிர்தம் கொடுக்கும்
ஒரு தெய்வம் நீதானய்யா
தெய்வானை வள்ளியுடன் மணக்கோலம் கொண்டு
திருப்பரங்குன்றம் வாழ்கின்றவன்
நீ தேவர்களைக் காத்திடவே வீரமுடன் வேலெடுத்து
செந்தூரில் ஆள்கின்றவன்
மாங்கனிக்கு கோபங்கொண்டு பார்புகழும் பழனியிலே
ஆண்டியென கோலம் கொண்டவன்
நீ தத்துவத்தின் சாறெடுத்து சுவாமிமலை எல்லையிலே
தகப்பனுக்கு பாடம் சொன்னவன்
காவலென நின்று பெரும் சினந்தணிந்து தணிகையிலே
கண்குளிரக் காட்சி தந்தவன்
நீ பாங்குடனே அருள் தரவே பழம் முதிரும் சோலையிலே
பரஞ்சோதியாய் நின்றவன் . . பரஞ்சோதியாய் நின்றவன்
கருணை மணம் கமழுமந்த அருணகிரி தமிழில் மனம்
மகிழ்ந்தாடி நின்ற முருகன்
கிழவியிவள் புலமை கண்டு அழகுமிகும் குழந்தையென
மயிலேறி வந்த குமரன்
ஆதிசிவன் பிள்ளையென ஆனைமுகன் தம்பியென
ஞானப்பழமான முதல்வன்
நீ பாடும் குரல் வளம் கொடுக்கும்
பனிமலையில் வாழுமந்த பார்வதியின் இளைய புதல்வன்
தேனெடுத்து தினைவளர்க்கும் சிறுகுறத்தி வள்ளியவள்
சிந்தையிலே நின்ற மன்னவா
நீ நாடிவரும் பக்தர்களின் நாட்டமதை தணித்தருளும்
ஞானகுரு நாதனல்லவா . . நாதனல்லவா
நினைக்கின்ற பொழுதெல்லாம்
நிகரில்லா பக்திரசம் தருகின்ற சக்தி வேலன்
நீ துதிக்கின்ற கணமெல்லாம் இனிக்கின்ற
இதயம்தனை அளிக்கின்ற வெற்றிவேலன்
அழகான அவதாரம் அழியாத புகழ் செல்வம்
அன்புக்கு ஒரு தெய்வம் நீ
சிறுகுறையேதும் இல்லாமல் குலம்காத்து
எந்நாளும் அருள்செய்யும் பெரும்வள்ளல் நீ
மலைதோறும் படைவீடு இருந்தாலும்
முருகா என் மனவீடு வந்து அமர்வாய்
நீ மயிலேறி விளையாடி சுவையான தமிழ்பாடல்
கனிவோடு தந்து அருள்வாய் . . கனிவோடு தந்து அருள்வாய்
தேவைகளை பூர்த்தி செய்யும் தேன்சொரியும்
மூன்றுதமிழ் குமரா உன் கோவிலாகும்
தினம் தேடிவரும் பக்தர்களின் தெளிவான
முதிர்ந்த மனம் முருகா உன் மயிலுமாகும்
வேடன் உருக்கொண்டு பெரும் வேங்கைமரமாகி நின்ற
வெண்ணீறு அணிந்த முருகன்
நீ வாடுகின்ற உள்ளமதில் வற்றாது அருள்சேர்க்கும்
வானோர்கள் போற்றும் தலைவன்
நீரெடுத்த மேனியுடன் ஆறெழுத்தில் பேரெடுத்து
நினைவெல்லாம் இனிக்கின்றவன்
நீ ஓரெழுத்து ஆயுதமாய் ஓளிர்கின்ற வேலெடுத்து
உறுதுணையாய் வருகிறவன் எனக்கு உறுதுணையாய் வருகிறவன்
குளிர்ச்சித் தரும் தென்றலிலே மகிழ்ச்சியுடன் விண்ணதிலே
பறக்கும் உந்தன் சேவற்கொடியே
மனதழற்சியின்றி தனைமறந்து மலர்ச்சியுடன்
தணிகையிலே நடம்புரியும் தோகை மயிலே
பன்னீரில் அபிஷேகம் வெண்நீறில் அலங்காரம்
அதிரூபம் கொண்ட முருகன்
நீ புரியாமல் அடியேனும் பிழைநூறு செய்தாலும்
பொருத்தருளும் செல்வக்குமரன்
ஒய்யார மயிலேறும் உன்காட்சி எழில்யாவும்
ஒளிவீசும் தெய்வாம்சமே
பொய்யான என் வாழ்க்கை புவி மீது நிலையாக
அருள் செய்ய வரவேணுமே . . நீ அருள் செய்ய வரவேணுமே
இகழ்தலையும் புகழ்தலையும் ஒருமுகமாய் கருதும்படி
செவி உரைத்த முத்துக்குமரன்
நீ வறுமையையும் வளமையையும் சமநிலையாய்
உணரும்படி மதிகொடுத்த செல்வக்குமரன்
தடைநூறு வந்தாலும் செயல்வெற்றியாக்கித் தரும்
தாராள குணம் கொண்டவன்
நீ வலைவீசும் அறிவுக்கு தொலைவான வானாகி
மாறாது அருள் செய்பவன்
தீராத காதலொடு திருவடியை தொழுபவர்க்கு
திரவியமே தருகின்றவன்
நீ தாராள உள்ளமொடு தவக்கோலம் கொண்டுவரும்
தார்மீக பொருள் தந்தவன் . . தார்மீக பொருள் தந்தவன்
சினம் கொண்ட என்மனதை இனம்கண்டு அருள்செய்து
வளமாக வைத்த முருகன்
நீ பசுதேடும் கன்றெனவே பசியோடு வந்தஎனை
பரிவோடு காத்த குமரன்
படியேறி கால்நடக்க காவடிகள் தோள்சுமக்க
துணையெனவே வந்த முருகன்
படிப்பறிவும் எழுத்தறிவும் குறைந்தஎனை உலகிலின்று
புலமைப் பெறச்செய்த குமரன்
தோல்விகண்டுத் துவளாத வெற்றுக்கண்டும் மகிழாத
மனம் கொடுத்த அன்பு முருகன்
நீ தேடிவந்த பகையாவும் திசைமாறி போகச்செய்து
எனையாளும் செந்தில்குமரன் . . எனையாளும் செந்தில்குமரன்
கல்லாகக் கிடந்த மனம் பூவாக மலர்ந்த விதம்
கந்தா உன் கருணையன்றோ
நான் எல்லாம் இழந்த பின்னும்
ஜீவன் இருப்பதிங்கே வேலா உன்னருளாலன்றோ
கோடிபணம் இருந்தாலும் மேலுமதை தேடுகின்ற
மானிடர்கள் கூட்டம் நடுவே
மனம் தேடி உனைத்திரிந்தபடி திருப்புகழை பாடுமெனை
நாடி வந்து காத்த குருவே
ஆசையெனும் தூண்டிலிலே மாட்டிக்கொண்ட என்மனதை
இதமாக மீட்ட முருகா
மோகமெனும் தீச்சுழலில் முங்கிவிட இருந்தஎனை
முழுதாக காத்த இறைவா . . முழுதாக காத்த இறைவா
விழுந்தவர்கள் எழுவதுவும் எழுந்தவர்கள் விழுவதுவும்
முருகா உன் செயலாலன்றோ
இங்கு அழுதவர்கள் சிரிப்பதுவும் சிரிப்பவர்கள் அழுவதுவும்
குமரா உன் தயவாலன்றோ
அந்திபகல் எப்பொழுதும் தங்குதடையில்லாமல்
உந்தன் முகம் கண்ணிலாடும்
தினம் எந்த நிலை கொண்டாலும்
கந்தன் துணையென்றாலே வந்த வினை மெல்ல ஓடும்
பணம் பதவி தேவையில்லை பொன்பொருளும் நாடவில்லை
முருகா உன் அருள் போதுமே
உயிர் வாழுகின்ற காலமெல்லாம் மாளிகையில் நாட்டமில்லை
குமரா உன் நிழல் போதுமே . . குமரா உன் நிழல் போதுமே
0 comments:
Post a Comment